வருமான வரி கணக்கு 5.83 கோடி பேர் தாக்கல்! பண்ணாதோர் அபராதத்துடன் வருமான வரி? புதுடில்லி :கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை, 5.83 கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர். ஊதியம் பெறுவோர் மற்றும் தனி நபர்கள், 2021 - 22ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது, கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், 5.83 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இறுதி நாளான, ஜூலை, 31ல், 72 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததாக வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொரோனா காரணமாக, 2020 - 21ம் நிதியாண்டின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கெடு இரு முறை நீட்டிக்கப்பட்டு, 2021, டிச.,31ம் தேதியுடன் முடிவடைந்தது. அப்போது, 5.89 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தனர். தற்போதும் அதே அளவிற்கு தாக்கல் ஆகியுள்ளது. கடந்த நிதியாண்டில், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ளவர்கள், வரும், டிச.,31க்குள், 5,000 ரூபாய் அபராதத்துடன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். இந்த அபராதம், 5 லட்சம் ரூபாய்க்குள் வருவாய் உள்ளவர்களுக்கு, 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.