மாருதி ஆல்டோ கார்! இன்று (ஆகஸ்ட் 18) விற்பனைக்கு அறிமுகம்!1651647245


மாருதி ஆல்டோ கார்! இன்று (ஆகஸ்ட் 18) விற்பனைக்கு அறிமுகம்!


இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். இந்தியாவில் தற்போது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார்களுக்குதான் அதிக 'டிமாண்ட்' உள்ளது. மறுபக்கம் சிறிய ஹேட்ச்பேக் கார்களுக்கு, வரவேற்பு குறைந்து வருகிறது.

எனவே சிறிய ஹேட்ச்பேக் கார்களின் விற்பனையை நிறுத்தி விட்டு, எஸ்யூவி கார்களில் கவனம் செலுத்துவது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களும் யோசிக்க தொடங்கியுள்ளன. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனமோ, ஆல்டோ காரின் மீது உள்ள நம்பிக்கையில், புதிய தலைமுறை ஆல்டோ கே10 (All-new Maruti Suzuki Alto K10) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய முழுமையாக தயாராகி விட்டது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய மாருதி ஆல்டோ கே10 கார், இன்று (ஆகஸ்ட் 18) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. மாருதி சுஸுகி ஆல்டோ கார் கடந்த 2000ம் ஆண்டில்தான் முதல் முறையாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 22 ஆண்டுகள் கடந்து விட்டன.

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 40 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆல்டோ கார்களை விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மிக நீண்ட காலமாக உற்பத்தியில் இருந்து வரும் மற்றும் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் ஒன்று என்ற பெருமையை மாருதி சுஸுகி ஆல்டோ தன்வசம் வைத்துள்ளது.

இந்த சூழலில் ஆல்டோ கே10 காரின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு வரவுள்ளதால், வரும் காலத்தில் இந்த காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என மாருதி சுஸுகி நிறுவனம் எதிர்பார்க்கிறது. 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் முற்றிலும் புதியதொரு அவதாரத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

அதிக வசதிகள், அதிக பாதுகாப்பு போன்றவற்றை எதிர்பார்க்கும் இன்றைய காலகட்ட வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், புதிய ஆல்டோ கே10 காரை மாருதி சுஸுகி உருவாக்கியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் ஆல்டோ கே10 காரின் டிசைனை மட்டும் மாற்றியமைக்கவில்லை. மேலும் முன்பு வழங்கப்படாத ஒரு சில புதிய வசதிகளையும் தற்போது கொடுத்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் ''ஹார்டெக்ட் பிளாட்பார்ம்'' (Heartect Platform) அடிப்படையில், புதிய ஆல்டோ கே10 கார் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் நீளம் 3,530 மிமீ ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் அகலம் 1,490 மிமீ ஆகவும், உயரம் 1,520 மிமீ ஆகவும் உள்ளது. இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,380 மிமீ ஆகும்.

பழைய மாடலை காட்டிலும், புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் உயரம் மற்றும் வீல்பேஸ் நீளம் என 2 முக்கிய அம்சங்களும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 6 கலர் ஆப்ஷன்களில் 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் கிடைக்கும். அவை சிஸலிங் ரெட், க்ரானைட் க்ரே, சாலிட் ஒயிட், ஸ்பீடி ப்ளூ, சில்க்கி ஒயிட் மற்றும் எர்த் கோல்டு ஆகியவை ஆகும்.

வசதிகளை பொறுத்தவரையில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் புதிய 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பவர் விண்டோக்கள் மற்றும் ரிமோட் கீ ஆகியவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறனை பொறுத்தவரையில், புதிய கே10சி சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 66 பிஹெச்பி பவரையும் மற்றும் 89 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார், ஒரு லிட்டருக்கு 25 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்கலாம் என கூறப்படுகிறது. இந்த புதிய மாடலின் ஆரம்ப விலையை மாருதி சுஸுகி நிறுவனம் வெறும் 3.50 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் நிர்ணயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் பற்றிய அனைத்து தகவல்களும் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விடும். இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் ரெனால்ட் க்விட் (Renault Kwid) போன்ற கார்களுக்கு, புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் விற்பனையில் கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog