மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. இன்று சட்டப்பேரவை சிறப்பு அமர்வு கூடுகிறது517824266
மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. இன்று சட்டப்பேரவை சிறப்பு அமர்வு கூடுகிறது
பரபரப்பான அரசியல் சூழலில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு இன்று தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த சிறப்பு அமர்வில், இன்று சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை, ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதனிடையே, கோவாவில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேற்றிரவு மும்பை வந்தடைந்தார்.
கோவாவில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை அழைத்து வரப்பட்ட சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், சொகுசு பேருந்து மூலம் கொலாபா பகுதியில் உள்ள தாஜ் நட்சத்திர விடுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். இன்றைய சிறப்பு சட்டப்பேரவை அமர்வில் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ள நிலையில், தங்கள் கூட்டணிக்கு 170க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இன்றைய சபாநாயகர் தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே-பாஜக கூட்டணி சார்பில் பாஜகவைச் சேர்ந்த ராகுல் நர்வேகர் போட்டியிடுகிறார். சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் உத்தவ் தாக்ரேவின் விசுவாசியான ரஞ்சன் சால்வி போட்டியிடுகிறார்.
இன்று புதிய சபாநாயகர் தேர்வாகும் பட்சத்தில் நாளை அவரே நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னின்று நடத்துவார். மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பலம் 288ஆக உள்ள நிலையில், பாஜகவிடம் 106 எம்எல்ஏக்களும், ஏக்நாத் ஷிண்டேவிடம் சுமார் 50 எம்எல்ஏக்களும் உள்ளனர்.தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியிடம் 44 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் மற்றும் சாகன் புஜ்பல் ஆகியோருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், முன்னாள் அமைச்சர்கள் அனில் தேஷ்முக் மற்றும் நவாப் மாலிக் ஆகியோர் சிறையில் உள்ளனர். இதனால் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த நால்வரும் வாக்களிக்க முடியாத சூழல் உள்ளது.
Comments
Post a Comment