NRA CET Exam: ஆண்டின் இறுதிக்குள் குரூப் பி,சி பணிகளுக்கான பொது தகுதித் தேர்வு - மத்திய அரசு


NRA CET Exam: ஆண்டின் இறுதிக்குள் குரூப் பி,சி பணிகளுக்கான பொது தகுதித் தேர்வு - மத்திய அரசு


இந்த ஆண்டு இறுதிக்குள் அரசிதழ் பதிவுபெறாத  அலுவலர் (நான் - கெஜட்டட் ) பணியிடங்களுக்கான பொது தகுதித் தேர்வு (CET) நடைபெறும் என்று மத்திய பணியாளர், பொது குறைதீர் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சர்  ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

நேற்று, தேசிய ஆள்சேர்ப்பு முகமை தொடர்பான கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய அமைச்சர், "  தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (NRA) கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது தகுதித் தேர்வை நடத்தத் தயாராகி வருகிறது. ஆண்டு இறுதிக்குள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையத்தைக் கொண்டு, வேலை தேடுபவர்களுக்கு எளிதாக பணியமர்த்தும் திட்டமாக இது இருக்கும்"என்று தெரிவித்தார்.

மேலும், "முதற்கட்டமாக இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 12 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும், பின்னர் அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் சேர்க்கப்படும்" என்றும் கூறினார்.

பொது தகுதித் தேர்வு: 

முன்னதாக, எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ் சார்பில் பி மற்றும் சி பிரிவில் வரும் (தொழில்நுணுக்கம் சாராத) பணிகளுக்கு பொதுத் தகுதித் தேர்வை நடத்த மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்தது. இதற்காக, மத்தியப்  பணியாளர் அமைச்சகத்தின் கீழ் தேசிய ஆள்தேர்வு முகமை (என்.ஆர்.ஏ., - National Recruitment Agency) என்ற அமைப்பும் செயல்பட இருக்கிறது.

எஸ்.எஸ்.சி., ரயில்வே ஆள் தேர்வு வாரியங்கள் மற்றும் ஐ.பி.பி.எஸ். சார்பில் நடத்தப்படும் பட்டதாரி, மேல்நிலை (12 ஆம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் மெட்ரிகுலேட் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி) என்ற மூன்று நிலைகளில் தொழில் நுணுக்கம் அல்லாத பணிகளுக்கான பொது தகுதித் தேர்வுகளை இந்த முகமை நடத்தும்.  இந்த மூன்று தேர்வுகளுக்கும் வெவ்வேறு பாடங்களை தேர்வர்கள் தயார் செய்து கொள்ள வேண்டிய சூழல் இருந்து வந்தது.மேலும், இவற்றுக்கு ஓவ்வொரு முறையும் தனித்தனியே கட்டணங்கள் செலுத்தி வந்தனர். ஒரே தேர்வாக நடத்தும்போது விண்ணப்பதாரர்களின் நிதிச் சுமை பெருமளவு குறைவதுடன், ஒவ்வொரு தேர்வுக்கும் தயார் செய்ய வேண்டும் காலம் மிச்சமாகும்.

தரநிலைப் படுத்தப்பட்ட, அனைத்துக்கும்  பொதுவான பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியில் தேசிய ஆள்சேர்ப்பு முகமை ஈடுபட்டுள்ளது. இத்தேர்வில், பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்படும். முதல்நிலை (Tier 1) தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு,  நிலை 2, நிலை 3 ஆகிய சிறப்பு தேர்வுகளை  அந்தந்த ஆள்தேர்வு முகமைகள் வழக்கம் போல் நடத்தும். அதாவது, எஸ்.எஸ்.சி பணிக்கான நிலை 1 தேர்வு மட்டுமே பொதுத் தகுதித் தேர்வின் கீழ் வரும். நிலை 2,3 ஆகிய தேர்வுகளை வழக்கம் போல் எஸ்எஸ்சி தேர்வாணையம் நடத்தும். 

இரண்டாம் நிலை தேர்வு எதுவும் இல்லாமல், இந்த மதிப்பெண்களின் அடிப்படையிலேயே ஆள்தேர்வை செய்யப் போவதாக சில முகமைகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. மேலும்,  மாநில அரசுகள்  மற்றும் தனியார் துறைகள் விருப்பத்தின் அடிப்படையில், இந்த மதிப்பெண்ணை  பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.     

இந்த மதிப்பெண் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும், தேர்வர்கள் எத்தனை முறையும் எழுதிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Pomegranate Chocolate Covered Granola Clusters #Pomegranate

Utah Celery Seeds #Seeds