ஆன்லைன் ரம்மி; அனல் பறந்த விவாதம்.. எடப்பாடி கேள்விக்கு ‘நச்’ பதிலடி கொடுத்த அமைச்சர்!


ஆன்லைன் ரம்மி; அனல் பறந்த விவாதம்.. எடப்பாடி கேள்விக்கு ‘நச்’ பதிலடி கொடுத்த அமைச்சர்!


ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் சிறப்பு கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

சட்டப்பேரவையின் நேரம் இல்லா நேரத்தில், ஆன்லைன் சூதாட்டம் குறித்து எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக அதிமுக அரசு அவசர சட்டம் பிறப்பித்து தடை பிறப்பித்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இது குறித்து சட்டத்துறை அமைச்சர், சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக அரசு உறுதியளித்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றஞ்சாட்டினார். சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் முதல்வருக்கு மாற்று கருத்து இல்லை என்று தெரிவித்தார்.

இந்த சட்டம் அதிமுக ஆட்சியில் அவசரமாக கொண்டு வரப்பட்டதாகவும், எதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது என்ற குறிப்புகள் முறையாக இல்லாததால்தான் உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததாகவும் கூறினார்.

இருப்பினும், அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத்தை நிலைநிறுத்தவே உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ரகுபதி, உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம் என்றும் கூறினார். மேலும் இருக்கும் சட்டத்தைக் கொண்டு மக்களை காக்க திமுக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Related Topics:, , , ,

Click to comment

Comments

Popular posts from this blog